இந்தியாவில் தொழில்முனைவோராக விரும்புபவர்களுக்கெல்லாம் முக்கிய ஆதர்சமாகத் திகழ்பவர் திருபாய் அம்பானி.
மிகச் சாதாரணப் பின்னணியிலிருந்து தொடங்கி படிப்படியாக முன்னேறி ரிலையன்ஸ் எனும் மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியவர் திருபாய் அம்பானி. துணிமணி வியாபாரத்திலிருந்து ஆரம்பித்து, அதன்பின் துணிகளைத் தயாரித்து, பின் பாலியெஸ்டர் வியாபாரம், பாலியெஸ்டர் உற்பத்தி, அதன்பின் பாலியெஸ்டர் உற்பத்திக்கான மூலப்பொருள்களை உருவாக்குவது, அந்த மூலப்பொருள்களின் ஆதாரமான பெட்ரோலிய சுத்திகரிப்பு, அங்கிருந்து பெட்ரோலையே தரையிலிருந்தும், கடலுக்கு அடியிலும் தோண்டுவது என்று படிப்படியாக, பார்த்துப் பார்த்து தன் தொழிற்சாலைகளைக் கட்டியவர். அம்பானி 70 mm அளவுக்கு விரிந்த திரையில் கனவு கண்டார். பிரம்மாண்டமாக மட்டுமே யோசித்தார். அதன் விளைவுதான் இன்று ரிலையன்ஸ் இந்தியாவிலேயே மிகப்பெரிய தனியார் நிறுவனமாக உள்ளது.
ஆனால் இத்தனையும் அதிர்ஷ்டத்தால் வந்ததல்ல. உழைப்பால், தைரியத்தால், முயற்சியால் வந்தது. அதே சமயம் காலத்துக்குத் தகுந்தாற்போல அரசுகளையும் அதிகாரிகளையும் தனக்குச் சாதகமாக வளைத்துக் கொள்வதன் மூலமும் அரசு உத்தரவுகளை தன் வசதிக்கேற்றவாறு புரிந்துகொள்வதன் மூலமும் அம்பானி தன் நிறுவனத்தை வளர்த்தார். அம்பானி, தன்னை எதிர்ப்பவர்களை அவர்களது ஆயுதங்களைக் கொண்டே மழுங்கடித்தார்.
இன்றைய காலகட்டத்தில் திருபாய் அம்பானியின் சில செயல்கள் நமக்கு ஏற்புடையதாக இருக்காது. ஆனால் அவரது விடாமுயற்சி, தன்னம்பிக்கை, இந்தியா மீதான பற்று, சக ஊழியர்கள் மீதான மரியாதை, தொழில் மீதான ஆழ்ந்த பக்தி ஆகியவை இன்றைக்கும் நம் அனைவருக்கும் வழிகாட்டக் கூடியவை. இந்தப் புத்தகம் அம்பானியின் வாழ்க்கை வரலாறு மட்டுமல்ல, கடந்த நாற்பதாண்டுகளில் இந்தியாவின் தொழில்துறையின் வரலாறும் இதில் அடங்கியிருக்கிறது.
எந்தவொரு சுய முன்னேற்ற நூலைக் காட்டிலும் பன்மடங்கு அதிகமான பலனை இந்தப் புத்தகத்தினைப் படிப்பதன் மூலம் ஒருவர் அடைய முடியும். இது நிஜமான வாழ்க்கை, வெறும் ஏட்டுச் சுரைக்காய் அல்ல.